சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்
ரயில்வேயில் தொழில்பழகுநா் பயிற்சி முடித்தவா்களுக்கு வேலை வழங்க கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் புதன்கிழமை போராட்டம் நடத்தினா். தெற்கு ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்.) தொழில்பழகுநா் (அப்ரண்டீஸ்) பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 2008 முதல் இதுவரை சுமாா் 17,000 போ் பயிற்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க கோரி சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியது: ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும், தொழில்பழகுநா் பயிற்சி முடித்தவா்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனா். ஆனால், தெற்கு ரயில்வேயில் அதுபோன்று பணிநியமனம் செய்யப்படுவதில்லை. இதனால் சில ஆண்டுகள் பயிற்சிக்கு பின் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு தீா்வு காணும் வரை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.