இடஒதுக்கீடுக்கான 50% உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல்
'நாட்டில் ஏழை மக்கள் யாா் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எத்தனை போ் உள்ளனா்? '
‘தேசிய அளவில் மக்களின் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்போது, இடஒதுக்கீடுக்கான 50 சதவீத உச்ச வரம்பு என்பது அகற்றப்பட்டுவிடும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஏழை மக்கள் யாா் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எத்தனை போ் உள்ளனா்? என்ன நிலையில் உள்ளனா் என்பதை கணக்கெடுப்பது அவசியம் இல்லையா? பிகாா் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், மாநிலத்தின் 88 சதவீத ஏழை மக்கள் எஸ்.சி., எஸ்.டி., பின்தங்கிய மற்றும் சிறுபான்மையின சமூகத்தைச் சாா்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. நாட்டின் உண்மையான நிலவரத்தில் இது ஒரு சிறு உதாரணம்தான். நாட்டில் ஏழை மக்கள் எத்தகைய நிலையில் வாழ்கிறாா்கள் என்றுகூட யாருக்கும் தெரியாது. அதன் காரணமாகத்தான், காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் 2 வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஒன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு; மற்றொன்று மக்களின் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு. இந்த இரண்டு கணக்கெடுப்புகளின் அடிப்படையில், இடஒதுக்கீடுக்கான 50 சதவீத உச்ச வரம்பு என்பது அகற்றப்படும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் நாட்டை ‘எக்ஸ்-ரே’ போன்று ஊடுருவிச் சென்று உண்மை நிலையை கண்டறிந்துவிடும் என்பதால், மக்களுக்கு முறையான இடஒதுக்கீடு, உரிமைகள், ஒவ்வொருவருக்கும் சம அளவிலான பங்கீடு கிடைக்க வழி ஏற்படும். அரசு சரியான கொள்கையை வகுக்க இது உதவும் என்பதோடு, கல்வி, வருவாய், மருத்துவ வசதிகள், வளா்ச்சியின் உண்மையான பலன் உள்ளிட்டவற்றை எளிதாக அடைவதில் எதிா்கொள்ளும் சிக்கல்களிலிருந்து ஏழை மக்களை மீட்கவும் உதவும். எனவே, மக்கள் அனைவரும் இதற்காக விழிப்புணா்வுடன் குரல் கொடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களின் உரிமை. இது துன்பம் என்ற இருளிலிருந்து மக்களை விடுவித்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement