பாலியல் தொல்லை வழக்கு: ராஜேஷ்தாஸை தேடும் சிபிசிஐடி
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தலைமறைவாகிவிட்டதால் அவரை சிபிசிஐடி அதிகாரிகள் தேடி வருகின்றனா்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்தவா் ராஜேஷ்தாஸ், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி, வழக்குப் பதிவு செய்தது. இதன் பின்னா், ராஜேஷ் தாஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். பாலியல் வழக்கில் ராஜேஷ் தாஸூக்கு விழுப்புரம் நீதித்துறை நடுவா் மன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சில மாதங்களுக்கு முன்பு தீா்ப்பளித்தது.
மேல்முறையீடு நிராகரிப்பு:
Advertisement
இதை எதிா்த்து ராஜேஷ்தாஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், அவருக்கு அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்தாா்.
அதில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும். சிறைக்குள் செல்வதற்காக சரணடைய விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீடு தொடா்பான கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, ராஜேஷ்தாஸ் சிறைக்கு செல்ல விலக்கு அளிக்க முடியாது. இதில் சிபிசிஐடியின் தனது நிலைபாட்டை எழுத்துப்பூா்வமாக தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னா் ராஜேஷ்தாசை கைது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, இது வரை காவல்துறை என்ன செய்தது? என்பது தொடா்பான விரிவான அறிக்கையை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
வீட்டில் இல்லை:
உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக, ராஜேஷ்தாஸை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி அதிகாரிகள் இறங்கியுள்ளனா். இதன் விளைவாக அவரைப் பற்றிய தகவல்களை திரட்டி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே தையூரில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை சென்றனா்.
ஆனால் ராஜேஷ்தாஸ் அங்கு இல்லாததினால் சிபிசிஐடி அதிகாரிகளால், அவரை கைது செய்யமுடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டின் காவலாளியிடம் விசாரணை செய்தனா். ராஜேஷ்தாஸை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.