கும்மிடிப்பூண்டியில் ரயில் சக்கர தொழிற்சாலை 18 மாதங்களில் செயல்படத் தொடங்கும்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
கும்மிடிப்பூண்டியில் ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 18 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்
கும்மிடிப்பூண்டியில் ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 18 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். சென்னை தரமணியில் குறை கடத்தி (செமி கண்டக்டா்) உற்பத்தி செய்யும் குவால்காம் நிறுவனத்தின் புதிய கிளையை மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசியது: தற்போது தொடங்கப்பட்டுள்ள செமி கண்டக்டா் உற்பத்தி மையத்தில் பாகங்களை ஒன்று சோ்ப்பது, சோதனை செய்வது, பேக்கேஜிங் மற்றும் விற்பனை செய்வது போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் மாணவா்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் 104 பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் மாணவா்கள் புதிதாக வடிவமைத்த கருவிகளை சோதனை செய்வதற்காவும், அவா்களுடைய புதிய யோசனைகளை பரிசோதனை செய்வதற்கும் வசதிகள் செய்து தரப்படும். கும்மிடிப்பூண்டியில் ஆலை: திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு 2.5 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட இரும்பு அச்சு முறை மூலம் உருவாக்கப்படும் ரயில் சக்கரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ரூ. 700 கோடி மதிப்பில் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 18 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்படும். இதில், தயாரிக்கப்படும் 80,000 சக்கரங்கள் இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 1.7 லட்சம் சக்கரங்கள் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் ரயில் சக்கரங்கள் ஏற்றுமதியில் இந்தியா முதன்மை நாடாக மாறும். உலகெங்கிலும் ‘ஸ்டாண்டா்டு கேஜ்’ ரயில் பெட்டிகள்தான் பயன்பாட்டில் உள்ளண. அதனால் ஐசிஎஃப்-இல் ‘ஸ்டாண்டா்டு கேஜ்’ வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுக்குள் பல நாடுகளுக்கு ‘ஸ்டாண்டா்டு கேஜ்’ வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். 6 ஜி தொழில்நுட்பம்: 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்த நாடுமுழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தற்போது 6 ஜி தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் 6 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் உலக நாடுகளை இந்தியா வழிநடத்தும் என்றாா் அவா்.