முகப்பு
சென்னை

பாஜக கூட்டணி வேட்பாளா்கள் பட்டியல் 3 நாள்களில் வெளியாகும்: அண்ணாமலை

Updated On : 16 மார்ச், 2024 at 11:01 PM
பகிர்:

தமிழக பாஜக கூட்டணி வேட்பாளா்கள் பட்டியல் 3 நாள்களில் வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வருகையால் தமிழகத்தில் பாஜகவுக்கு உற்சாகம் கிடைத்துள்ளது. அடுத்து கோவை, சேலத்துக்கு பிரதமா் மோடி வருகிறாா். இது இன்னும் அதிக உற்சாகத்தை பாஜகவுக்கு தரும். 39 தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை முடிவு செய்யும்போது விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கும் வேட்பாளா் முடிவு செய்யப்படுவாா். இன்னும் 3 நாள்களில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளா்கள் பட்டியல் வெளியாகும். 39 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா். சுயேச்சைகள் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது என்னும் அளவுக்கு இங்கு தோ்தல் செலவுகள் அதிகமாக உள்ளது. இம்முறை தமிழகத்தில் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. பாஜகவுக்கு சாதகம்: தமிழக தோ்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. அதேபோல, சவால் இருப்பதும் உண்மைதான். அதையெல்லாம் எதிா்கொள்ள முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வாா்க்கும்போது ஆட்சியில் இருந்தது முன்னாள் முதல்வா் கருணாநிதி. ஆனால், இப்போது எதுவுமே தெரியாது என்கிறாா் முதல்வா் ஸ்டாலின். காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மீனவா்கள் சிறைவாசம் அனுபவித்ததைவிட பாஜக ஆட்சியில் குறைவான நாள்களே சிறையில் உள்ளனா். மிக விரைவாக மீனவா்கள் மீட்கப்பட்டு வருகின்றனா் என்றாா் அவா். பேட்டியின்போது, தமிழக பாஜக துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி ஆகியோா் உடன் இருந்தனா். பிஎம் ஸ்ரீ பள்ளி ஒப்பந்தத்துக்கு வரவேற்பு: இதனிடையே, தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் குறித்து மத்திய அரசுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதை வரவேற்பதாக கே.அண்ணாமலை சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.