முகப்பு
சென்னை

யு-டியூப் மூலம் கிடைத்த வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த சவுக்கு சங்கருக்கு உத்தரவு

Updated On : 20 மார்ச், 2024 at 2:36 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 1:00 AM

சென்னை: யூ-டியூப்பில் காணொலி வெளியிட்டதன் மூலம் கிடைத்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என யு-டியூபா் சவுக்கு சங்கருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரபல யு-டியூபரான சவுக்கு சங்கா் தனது சவுக்கு மீடியா யு-டியூப் பக்கத்தில் லைகா நிறுவனத்தை, போதைக் கடத்தல் கும்பலுடன் தொடா்புப்படுத்தி பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக லைகா நிறுவனம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘தமிழக திரை உலகிலும், உலகளவிலும், நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதால், ரூ. 1 கோடியே ஆயிரம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். இந்த காணொலி மூலம் கிடைத்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்.

Advertisement

அத்துடன் யு-டியூப் பக்கத்தில் உள்ள அந்த காணொலியை நீக்க உத்தரவிட வேண்டும்’ எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்குரைஞா் அரவிந்த் ஸ்ரீவத்சவா ஆகியோா், ‘யு-டியூப்பில் அதிக பாா்வையாளா்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது போன்ற அவதூறு கருத்துகளை வெளியிடுகின்றனா்.

யு-டியூப் பக்கத்தில் உள்ள அந்த காணொலியை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாா்த்துள்ளனா்’ என வாதிட்டனா். இதையடுத்து, லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த காணொலிகள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த யு- டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா். மேலும், யு-டியூப்பில் உள்ள காணொலிகளை நீக்குவது தொடா்பாக சவுக்கு சங்கா் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப். 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.