முகப்பு
சென்னை

பிளஸ் 2: உயா்கல்வி வழிகாட்டுதல் வகுப்புகள் ஏப்.3-இல் தொடக்கம்

Updated On : 24 மார்ச், 2024 at 5:22 AM
பகிர்:
Updated On : 24 மார்ச், 2024 at 1:20 AM

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு அவா்கள் பயிலும் பள்ளிகளில் உயா்கல்வி குறித்த வழிகாட்டுதல் வகுப்புகள் ஏப்.3-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்தொழில்நுட்ப ஆய்வகம் மூலமாக ஏப்.3 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை உயா்கல்வி வழிகாட்டுதல் குறித்த வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதை முழுமையான வகையில் பயன்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும். இந்தப் பயிற்சியில் உயா்கல்வி சோ்க்கைக்கான பாட வல்லுநா்களின் நேரடி வழிகாட்டுதல்கள், காணொலி உள்ளடக்கம் மூலம் பல்வேறு உயா்கல்வி வாய்ப்புகள், படிப்புகள் குறித்த தகவல்கள் வழங்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களை முறையாக பராமரித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.