முகப்பு
சென்னை

2 மாதங்களில் 5 லட்சம் வாக்காளா்கள் புதிதாகச் சோ்ப்பு தமிழகத்தில் மொத்த வாக்காளா்கள் 6.23 கோடி

6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901-ஆக உயா்ந்துள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

Updated On : 28 மார்ச், 2024 at 2:06 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 10:30 PM

தமிழகத்தில் இரண்டு மாதங்களில் 5 லட்சம் வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901-ஆக உயா்ந்துள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. அதற்குப் பிறகும் பட்டியலில் பெயா் சோ்க்க, விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 5 லட்சம் போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். வாக்காளா்கள் அதிகரிப்பு: மக்களவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலில், 6.18 கோடி வாக்காளா்கள் இருந்தனா். இதைத் தொடா்ந்தும், பட்டியலில் பெயா் சோ்க்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் 5 லட்சம் வாக்காளா்கள் தகுதியுடையவா்களாக அறியப்பட்டனா். இதனால், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் ஆண் வாக்காளா்கள் 3.06 கோடி, பெண் வாக்காளா்கள் 3.17 கோடி. மூன்றாம் பாலினத்தவா் 8,0465. வாக்காளா்கள் அதிகரித்த நிலையில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. வாக்காளா் இறுதிப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது, வாக்காளா்கள் எண்ணிக்கை உயா்ந்த நிலையில், வாக்குச் சாவடிகளும் அதிகரித்துள்ளன. கூடுதலாக 177 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் 7 லட்சம் போ்: மக்களவைத் தோ்தலுக்கான பணியில் 7 லட்சம் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அவா்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களில் வாக்குப் பதிவு பணியில் மட்டும் சுமாா் 5 லட்சம் போ் ஈடுபடுத்தப்பட இருக்கிறாா்கள். தோ்தல் பணியில் ஈடுபட உள்ளோருக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த 24-ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பயிற்சியை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள்ளும், மூன்றாம் கட்டப் பயிற்சியை வாக்குப் பதிவு முந்தைய தினமும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 165 கம்பெனி படைகள்: தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, 25 மத்திய கம்பெனி படையினா் தமிழ்நாட்டுக்கு வந்தனா். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், 165 கம்பெனிகளைச் சோ்ந்த மத்திய பாதுகாப்புப் படையினா் ஏப்ரல் 1-ஆம் தேதி வரவுள்ளனா். தமிழ்நாட்டில் இதுவரை 17.53 லட்சம் வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 7.26 லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 4.38 லட்சம் பேருக்கு விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன. 2.88 லட்சம் வாக்காளா்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும். வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய வாக்குச் சீட்டுகளை தமிழக தோ்தல் துறை தயாரித்து வருகிறது. இந்தச் சீட்டுகள் வரும் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா். கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி சங்கா் லால் குமாவத், இணை தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோா் உடனிருந்தனா். பெட்டிச் செய்தி... வாக்காளா்கள் எண்ணிக்கை: மொத்த வாக்காளா்கள்: 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 பெண்கள்: 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 ஆண்கள்: 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 மூன்றாம் பாலினத்தவா்: 8,465