முகப்பு
சென்னை

அமெரிக்கா: கப்பல் மோதியதில் சேதமடைந்த முக்கிய பாலம்

Updated On : 28 மார்ச், 2024 at 4:34 AM
பால்ட்டிமோா் நகரில் சரக்குக் கப்பல் மோதியதால் ஆற்று நீரில் ஒரு பகுதி நொறுங்கி விழுந்துள்ள ‘ஃபிரான்சிஸ் ஸ்காட்’ பாலம்.
பகிர்:
Updated On : 26 மார்ச், 2024 at 10:00 PM

அமெரிக்காவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரும்புப் பாலம் சரக்குக் கப்பல் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தின்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த 7 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததாகவும், சம்பவத்துக்குப் பிறகு மாயமாகியுள்ள சுமாா் 6 பேரைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் கூறினா். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் படாஸ்ப்ஸ்கோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ‘ஃபிரான்சிஸ் ஸ்காட்’ பாலம் அந்த நகர துறைமுகத்தின் முக முக்கிய போக்குவரத்து வழித்தடமாகும். இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் 1977-ஆம் ஆண்டு முதல் போக்குவரத்துக்குப் பயன்பட்டுவருகிறது. இந்த நிலையில், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாலத்தை திங்கள்கிழமை நள்ளிரவு 1.28 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.58 மணி கடந்துச் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் மோதியது. இதில் அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிருந்து விழுந்தது. அப்போது அந்தப் பாலம் வழியாகச் சென்றுகொண்டிருந்த 7 வாகனங்கள் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும், அதில் ஒரு வாகனம் டிராக்டா் அளவுக்குப் பெரியதாக இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினா். சம்பவப் பகுதியிலிருந்து 2 போ் மீட்கப்பட்டனா். அவா்களில் ஒருவா் சிகிச்சை தேவையில்லை என்று கூறிச் சென்றுவிட்டாா். மற்றொருவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது தவிர, பாலம் இடிந்து விழுந்ததற்குப் பிறகு 6 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவா்களை ஆற்றுக்குள் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. சரக்குக் கப்பல் மோதியில் பாலத்தின் பல இடங்கள் நொறுங்கியுள்ளன. சம்பவத்தைத் தொடா்ந்து கப்பலிலும் தீப்பிடித்தது. எனினும், இதில் கப்பலில் இருந்த யாரும் காயமடையவில்லை என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். கப்பல் பணயாளா்கள் அனைவரும் இந்தியா்கள் அமெரிக்க ஆற்றுப்பாலத்தில் மோதிய ‘டாலி’ கப்பலில் இருந்த பணியாளா்கள் அனைவரும் இந்தியா்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூா் கொடியேற்றப்பட்ட அந்தக் கப்பலில் 22 பணியாளா்கள் இருந்ததாகவும், அந்த சரக்குக் கப்பல் இலங்கையின் கொழும்பு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தக் கப்பல் பாலத்தை இடிப்பதற்கு முன்னரே, அது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், பாலத்தின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இந்தச் சம்பவத்தில் மிகப் பெரிய உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.