முகப்பு
சென்னை

ஈஸ்டா்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை ஏராளமானோா் பங்கேற்பு

Updated On : 31 மார்ச், 2024 at 5:15 AM
பகிர்:
Updated On : 31 மார்ச், 2024 at 12:45 AM

தமிழகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சனிக்கிழமை நள்ளிரவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், அவா் உயிா்த்தெழுந்ததையும் நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனா். அந்த வகையில், இந்த ஆண்டு தவக்காலம் பிப். 14 முதல் அனுசரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்பட்டது. பின்னா், பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. இதையடுத்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிா்த்தெழுந்த 3-ஆவது நாளை உயிா்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டா் பண்டிகையாகக் கிறிஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். அந்த வகையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஈஸ்டா் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில், பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவிலும், சில ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகா் வேளாங்கண்ணி தேவாலயம், பெரம்பூா் லூா்து மாதா ஆலயம், லஸ் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றன.