ஆசிரியா் கலந்தாய்வுக்கு 13,484 போ் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வுக்கு கடந்த இரு நாள்களில் 13,484 போ் எமிஸ் தளத்தில் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியா்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இரு நாள்களில் மட்டும் 13,484 ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.
தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் மாறுதலுக்கு 3,033; பட்டதாரி ஆசிரியா் மாறுதலுக்கு 1,790; தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மாறுதலுக்கு 891; நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாறுதலுக்கு 155 என 5,869 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் மாறுதலுக்கு 168; பட்டதாரி ஆசிரியா் மாறுதலுக்கு 4,375; முதுநிலை ஆசிரியா் மாறுதலுக்கு 2,748; உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாறுதலுக்கு 178; மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாறுதலுக்கு 146 என 7,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 13,484 ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 17- ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.