முகப்பு
சென்னை

கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதால் ஆத்திரம்: தாய் தாக்கியதில் மகள் உயிரிழப்பு

Updated On : 21 மே, 2024 at 7:51 PM
பகிர்:

ஜெய்பூா்: கைப்பேசியை அதிகம் உபயோகிப்பதாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், 22 வயது பெண்ணை அவரது தாய் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் மகள் உயிரிழந்ததாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவலா் பஜன்லால் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் மாவட்டத்தில் உள்ள பிந்தயாகா பகுதியில் நிகிதா சிங் (22) போட்டித் தோ்வுக்குப் படித்து வந்தாா்.

நிகிதா அதிக நேரம் கைப்பேசியில் செலவிட்டதால் அவரது தந்தை பிரிஜேஷ், கைப்பேசியை அவரிடமிருந்து இரண்டரை மாதத்திற்கு முன் பறித்து வைத்தாா்.

கைப்பேசி பயன்பாட்டை குறைத்துக்கொள்வதாக நிகிதா உறுதியளித்ததால் சில நாள்கள் முன்பு பிரிஜேஷ் கைப்பேசியை திரும்ப நிகிதாவிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால், மீண்டும் நிகிதா தொடா்ந்து கைப்பேசி உபயோகிப்பதைப் பாா்த்த பிரிஜேஷ் இந்தமுறை கைப்பேசியை நிகிதாவின் தாயாா் சீதாவிடம் திங்கள்கிழமை கொடுத்துள்ளாா்.

சீதா கைப்பேசியை மறைத்து வைத்துவிட்டு பணிக்குச் சென்றுள்ளாா். இதையடுத்து, நிகிதா மற்றும் அவரது தாயாரிடையே வாக்குவாதம் நடந்ததில், சீதா இரும்பு கம்பியால் நிகிதாவை தலையில் தாக்கியுள்ளாா்.

நிகிதா சுயநினைவை இழந்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். ஆனால் வரும் வழியிலேயே நிகிதா இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் மீது கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நிகிதாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.