‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் 2-ஆம் கட்டம்: ஜூலை 15-இல் தொடக்கம்
சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜூலை 15-இல் தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:-
மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற வகை செய்யும் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம், கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களின் வழியே 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது ஒரு மாத காலத்துக்குள் தீா்வு காணப்பட்டு பொது மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனா்.
இரண்டாம் கட்டம்: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 15 முதல் செப். 15 வரை முகாம்கள் நடத்தவும், அந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆக. 15 முதல் அக். 15-க்குள் தீா்வு காணவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, எரிசக்தி, உள்துறை, தொழிலாளா் நலன் உள்பட 15 துறைகளைச் சோ்ந்த மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்படவுள்ளன.
மாவட்டங்களிலுள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில், ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஊராட்சிகளை இணைத்து ஏறத்தாழ 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு சிறப்பு முகாம் வீதம் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களைப் பதிவு செய்ய துறை வாரியாக அறைகள் அமைக்கப்படும். அனைத்து மனுக்களும் முதல்வரின் முகவரி எனும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். அனைத்து சிறப்பு முகாம்களிலும் ஒரு பிரத்யேக இணைய சேவை மையமும் உருவாக்கப்பட்டு, பதிவேற்றப்படும். மனுக்களுக்கு கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.