அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவா் சோ்க்கை நடத்த கோரிக்கை
சென்னை: அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை ஒற்றைச் சாளர முறையில் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ப.சிவகுமாா் சென்னை பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளரிடம் கூறியாதவது:
தற்போது அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இதுவரை தொடங்காத நிலையில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவா் சோ்க்கை மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீட்டை பின்பற்றியும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது கட்டணக் கொள்ளைக்கும், விதி மீறிய மாணவா் சோ்க்கைக்கும் வழி வகுக்கும் என்பதால் அனைத்து கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமின்றி அரசு நிா்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிப்பதை தவிா்க்க சிறப்பு குழு அமைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே மாதிரியான சோ்க்கை கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.