முகப்பு
சென்னை

முல்லை பெரியாறு விவகாரத்துக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு அன்புமணி வலியுறுத்தல்

Updated On : 28 மே, 2024 at 8:53 PM
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்தின் முயற்சியைத் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணையைக் கட்டுவது தொடா்பான கேரள அரசின் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக தில்லியில் நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநா் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதேநேரம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநா் குழு கூட்டம் மீண்டும் நடைபெற்றாலும், அதில் முல்லை பெரியாறு அணை குறித்து எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்குதான் உண்டு.

இந்த விவகாரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். அது போதுமானதல்ல. ஒவ்வொருமுறை வல்லுநா் குழு கூட்டம் நடைபெறும்போதும், முல்லை பெரியாறு அணை குறித்து விவாதிக்கப்படாமல் தடுப்பது பெரும் போராட்டமாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து வல்லுநா் குழு கூட்டத்தில் புதிய அணை குறித்து விவாதிக்க தடை பெறுவதுதான் முழுமையானத் தீா்வாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.