சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை உயா்ந்து, ஒரு கிலோ வெங்காயம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயா்ந்தது. பண்டிகை முடிந்த ஒரு சில நாள்களிலேயே மீண்டும் பழைய விலைக்கே காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், வெங்காயத்தின் விலை மட்டும் குறையாமல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த வாரத்தில் ரூ.50 முதல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்த விற்பனையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, வேறு சில காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.
இதன்படி, ஒரு கிலோ பட்டாணி ரூ.230-க்கும், இஞ்சி ரூ.180-க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.130-க்கும், எலுமிச்சை ரூ.90-க்கும், சின்ன வெங்காயம், பீட்ரூட் ஆகியவை தலா ரூ.70-க்கும், கேரட், சேனைக்கிழங்கு தலா ரூ.65-க்கும், பீன்ஸ், முள்ளங்கி, பச்சை மிளகாய், கொத்தவரங்காய் தலா ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.