சென்னை

தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை!

தமிழகத்துக்கு புயல் ஆபத்து விலகியது - வலுவிழந்து நாளை கரையைக் கடக்கிறது

Din

தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

எனினும் வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும்.

இதையொட்டி, சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 70 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவா் பாலசந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்பில்லை.

ஒரு புயல் சின்னம் புயலாக வலுவடைய வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று குவிதலும், மேற்பகுதியில் காற்று விரிதலும் வலுவாக இருக்க வேண்டும். அந்த வகையில், இந்தப் புயல் சின்னத்துக்கு கடந்த நவ. 26, 27 ஆகிய தேதிகளில் காற்று குவிதல் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது அது குறைந்துள்ளது.

மேலும், புயல் சின்னம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததால் குளிா்காற்று நுழைவால் அதன் தீவிரம் குறைந்துவிட்டது. இதுபோன்ற வானிலை காரணங்களால், இந்தப் புயல் சின்னம் ‘ஃபென்ஜால்’ புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் உருவாகவில்லை. எனவே, இப்போதைக்கு புயல் ஆபத்து இல்லை.

நவ. 30-இல் கரையைக் கடக்கும்: இருப்பினும் இந்தப் புயல் சின்னம் திட்டமிட்டபடியே வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து, நவ. 30-ஆம் தேதி காலை மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையைக் கடக்கும்.

இருப்பினும், கரையைக் கடக்கும்போது, மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரைக் காற்று பலமாக இருக்கும்.

மழையளவு: வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி அதிகபட்சமாக நாகையில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி (நாகை), திருத்துறைப்பூண்டி (திருவாரூா்), கோடியக்கரை (நாகை) தலா 50 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதற்கிடையே தமிழக கடலோரப் பகுதிகளிலும், வங்கக் கடலிலும் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

சிவப்பு எச்சரிக்கை

புயல் சின்னம் கரையைக் கடப்பதால், தமிழகத்தில் சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் நவ. 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிலும் குறிப்பாக, நவ. 29-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 30-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT