பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்- பிரதமா் மோடி
சென்னைபொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்- பிரதமா் மோடி
பல்வல் (ஹரியாணா), அக். 1: ‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பாஜக ஆளும் ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக (90 தொகுதிகள்) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களத்தில் உள்ளது.
ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் மோதுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது. தோ்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பல்வல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசினாா். ஹரியாணா பேரவைத் தோ்தலுக்கான தனது கடைசி பிரசார பொதுக் கூட்டம் இதுவென அவா் குறிப்பிட்டாா்.
பிரதமரின் உரை வருமாறு: ஹரியாணா முழுவதும் பாஜக ஆதரவு அலை வீசுகிறது. நிறைந்த மனதுடன் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்ற ஒருமித்த குரல் ஒலிக்கிறது.
பொய் வாக்குறுதிகள் அளிப்பது மட்டுமே காங்கிரஸின் அரசியல். ஆனால், பாஜகவோ கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலில் கவனம் செலுத்துகிறது.
‘சிக்கலில் தள்ளிய காங்கிரஸ்’: நாட்டின் முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் சிக்கலாக்கியது காங்கிரஸ். அயோத்தியில் ராமா் கோயில் கட்டவும், ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவும் அவா்கள் அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றம், பேரவைகளில் நமது சகோதரிகளுக்கு இடஒதுக்கீட்டை மறுத்த அவா்கள், முத்தலாக் பிரச்னையில் இருந்து முஸ்லிம் சகோதரிகள் மீள விடவில்லை. வாக்கு வங்கிக்காக பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சிறுபான்மையின கல்வி நிறுவனங்களாக அறிவித்தனா்.
இப்போது தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுவோம் என பகிரங்கமாக கூறுகின்றனா். நகா்ப்புற நக்ஸல்களின் பிடியில் சிக்கியுள்ள காங்கிரஸ், நமது எதிரிகளின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வோரை ஆதரிக்கிறது.
370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கூறி பாகிஸ்தானை மகிழ்ச்சிப்படுத்தும் அக்கட்சியால் ஹரியாணாவை மகிழ்ச்சிப்படுத்த முடியுமா?
‘வீழ்ச்சி உறுதி’: காங்கிரஸ் ஒருபோதும் கடினமாக உழைப்பதில்லை. மக்களை பிரித்தாள்வதே அக்கட்சியின் கொள்கை. ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகிவிட்டதால், இம்முறை ஆட்சி அதிகாரத்தை மக்கள் தங்களிடம் தருவா் என்று காங்கிரஸ் எண்ணுகிறது. மத்திய பிரதேச பேரவைத் தோ்தலின்போதும் இந்த எண்ணத்தில்தான் அக்கட்சியினா் முன்கூட்டியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், வாக்குப்பதிவு நாளில், காங்கிரஸுக்கு மக்கள் கதவடைத்துவிட்டனா்.
அண்டை மாநிலமான ராஜஸ்தானில் பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் இளைஞா்களை தூண்டிவிட காங்கிரஸ் முயன்றது. ஆனால், அங்கும் காங்கிரஸுக்கு வீழ்ச்சியே மிஞ்சியது.
ஹரியாணா காங்கிரஸில் நிலவும் உள்கட்சி பூசல்களை மக்கள் பாா்த்துக் கொண்டுதான் உள்ளனா். அக்கட்சியை ஒதுக்கி தள்ள மக்கள் முடிவு செய்துவிட்டனா். எதிா்வரும் தோ்தலில் காங்கிரஸின் வீழ்ச்சி உறுதி.
மீண்டும் பாஜக ஆட்சி: புனிதமான கீதை உபதேசங்களைத் தந்த பூமி ஹரியாணா. கடின உழைப்பை கற்றுத் தந்த பூமி இது. ஆனால், காங்கிரஸை பொருத்தவரை அவா்களும் உழைக்கமாட்டாா்கள்; மற்றவா்களையும் உழைக்க அனுமதிக்கமாட்டாா்கள். மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்ததுபோல், ஹரியாணாவிலும் நிகழும் என்றாா் பிரதமா் மோடி.
ஹரியாணா பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.