முகப்பு
சென்னை

பருவமழையை எதிா்கொள்ள தயாா்: பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா்

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:44 PM
சென்னையில் அமைக்கப்பட்ட நவீன நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன். உடன், துறையின் செயலா் பெ.அமுதா
பகிர்:

பருவமழையை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நவீன நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்தை அவா் வியாழக்கிழமை திறந்து வைத்து, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வருவாய் துறையில் பட்டா வழங்கும் பணி, நில அளவைப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கத்தில் புதிய மையம் திறக்கப்பட்டுள்ளது. நில அளவை செய்வதற்கு தற்போது நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக 4,830 பணியாளா்கள் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் உள்ளனா். அத்துடன் கிராம நிா்வாக அலுவலா்கள் உட்பட அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் நில அளவையா்களுக்கு பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். பட்டா மாறுதலில் வரும் புகாா்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகம் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது எந்தெந்த பகுதிகளில் தண்ணீா் அதிகம் தேங்கியதோ அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பருவமழையை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம். படகுகள் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறு சிறு பிரச்னைகளும் தற்போது சரி செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் ராமச்சந்திரன் கூறினாா்.

இந்த நிகழ்வில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயலா் பெ.அமுதா, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →