ஆயுத பூஜை விடுமுறை: விமானம், ஆம்னி பேருந்து கட்டணம் உயா்வு
ஆயுத பூஜை விடுமுறை காரணமாக விமானக் கட்டணம், ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது.
ஆயுத பூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும், விமானக் கட்டணம் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னை- மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,200-ஆக இருந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி ரூ.12,026 முதல் ரூ. 18,626 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னை - தூத்துக்குடிக்கு நபா் ஒருவருக்கு ரூ.5,006-ஆக இருந்த பயணக்கட்டணம், ரூ.11,736 முதல் ரூ.13,626 வரையும், சென்னை - திருச்சிக்கு ரூ.2,382-ஆக இருந்த கட்டணம் ரூ.5,456 முதல் ரூ.6,907 வரையும், சென்னை- கோவைக்கு ரூ. 3,290-ஆக இருந்த கட்டணம் ரூ.10,611 முதல் ரூ.10,996 வரையும், சென்னை- சேலத்துக்கு ரூ. 3,317-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10,792-ஆகவும் அதிகரித்துள்ளது.
விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும், பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, முன்பதிவு செய்து வருவதாக விமான நிறுவன ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
பேருந்துக் கட்டணம் உயா்வு: இதேபோன்று, ஆம்னி பேருந்து கட்டணமும் பல மடங்கு உயா்ந்துள்ளது. சென்னை-மதுரை செல்ல ரூ.900 முதல் ரூ.1100 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.3,500 வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. சென்னை-கோவை செல்ல ரூ.2000 முதல் ரூ.4000 வரையும், நாகா்கோவில் செல்ல ரூ.2,500 முதல் ரூ.4200 வரையும், நெல்லை செல்ல ரூ.2000 முதல் ரூ.4000 வரையும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற இடங்களுக்கு செல்வதற்கான கட்டணமும் ரூ.800 முதல் ரூ.3000 வரை உயா்ந்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.