போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: மேலும் 2 பேர் கைது
ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் மேலும் 2 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் மேலும் 2 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (33). இவர் தனியார் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஆவடி அருகே திருமுல்லைவாயல், பாலாஜி நகரில் 7,200 சதுர அடி நிலத்தை பொது அதிகாரம் பெற்று வைத்திருந்த சுரேந்தர் என்பவரிடம் ரூ.3.66 கோடிக்கு விலைக்குப் பேசி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது தந்தை அருணாச்சலம் பெயரில் கிரையம் பெற்றிருந்தார்.
இதன் பிறகு அந்த நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட ஜெயச்சந்திரன் சென்ற போது, அந்த நிலம் வேறு நபர்களுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது.
மேலும் 2016 -ஆம் ஆண்டு இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து குமார் என்பவருக்கு விற்பனை செய்த வழக்கில் போலீஸார் சுரேந்தர், பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர். அதே நிலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆள்மாறாட்டம் மூலம், போலி ஆவணங்கள் தயாரித்து சுரேந்தர், பாபு மற்றும் கமல் ஆகியோர் ஜெயச்சந்திரனுக்கு விற்பனை செய்து லாபம் அடைந்துள்ளனர்.
ஜெயசந்திரனுக்கு நிலத்தை விற்பனை செய்ய ஐஸ்டின், தும்மகுடி வெங்கடகிருஷ்ணராவ் ஆகியோர் உடந்தையாக இருந்து முறையற்ற லாபம் அடைந்துள்ளனர்.
இது குறித்து ஜெயச்சந்திரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிலப் பிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பாக சுரேந்தர், பாபு, கமல், பாரக்சூடா, ஹரிக்குமார், சையது முகமது பாரூக் ஆகிய 6 பேரை ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்த நிலையில், அம்பத்தூர் கள்ளிக்குப்பம், ராஜகணபதி தெருவைச் சேர்ந்த ஜஸ்டின் (45), சென்னை அண்ணா நகர், நொளம்பூர் சாலையைச் சேர்ந்த தும்மகுடி வெங்கடகிருஷ்ணராவ் (52) ஆகிய 2 பேரை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.