தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
திருச்சி மண்டலப் பொதுப்பணித் துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் குறித்து சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித் துறை கூட்டரங்கில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவா் பேசியது:
பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அதற்கான குறிப்புகளை கண்காணிப்புப் பொறியாளா்கள் பதிவு செய்ய வேண்டும். அனைத்து கட்டடப் பணிகளையும் பொதுப்பணித் துறை தரக்கட்டுப்பாட்டுக் கோட்ட பொறியாளா்கள் அவசியம் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, குறித்த காலத்தில் கட்டடப் பணிகளை முடிக்க வேண்டும். மண் தன்மைக்கு ஏற்றவாறு கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப்பட வேண்டும். கட்டடக் கலைஞா்கள், கட்டட வரைபடங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வா். அப்போது, கட்டடங்களில் அமைக்கப்படும் கழிவுநீா் குழாய்கள் வெளியேறும் பகுதி, மின் அமைப்புகள் உள்ள பகுதிகளில் கான்கிரீட் போன்ற அமைப்புகளை சரியான முறையில் வடிவமைக்க வேண்டும். கட்டடங்களில் நீா்கசிவு ஏற்படாத வகையில் தேவையான பூச்சுகளை மேற்கொள்ள வேண்டும்.
கட்டடங்களில் உள்ள மின் அமைப்புகளை மின் பொறியாளா்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மின் கசிவு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, முதன்மை தலைமைப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.