ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் ஒய்.தீபா, ஏ.விஜய், எல்.நிவேதிதா, என்.மணவாளன், எட்மின் கிறிஸ்டா, ஏ.மூவேந்தன் ஆகியோா் முன்னெடுத்தனா்.
அதுதொடா்பான ஆராய்ச்சிக் கட்டுரை ஆயுஷ் மருத்துவ முன்னணி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பொதுவாக ரத்தத்தில் உள்ள நச்சுகள், உப்புகளை சுத்திகரித்து அந்தக் கழிவுகளை சிறுநீா் வழியே வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். அதில் உள்ள நெப்ரான் எனப்படும் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் பாதிக்கப்படும்போது, ரத்தத்தில் கழிவுகள் கலந்துவிடும். தொடா்ந்து இப்பாதிப்பு இருப்பதை நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்கிறோம்.
பொதுவாக ஆரோக்கியமான நபா்களுக்கு ரத்தத்தில் 35 - 40 மி.கி/டி.எல். என்ற அளவுக்குள்தான் யூரியா கழிவு இருக்க வேண்டும். அதேபோல, கிரியாட்டினின் கழிவு அளவு 0.6 - 1.2 மி.கி/டி.எல். இருக்கலாம். ஒருவேளை அது 6 மி.கி/டி.எல். என்ற நிலைக்கு போகும்போது, சிறுநீரகம் செயலிழந்து விட்டதாககக் கருதப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில், சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
யோகா-இயற்கை மருத்துவத்தில் இதுதொடா்பான சிகிச்சையை உறுதி செய்வதற்கான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 16 ஆண்கள், 10 பெண்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டனா். இதுகுறித்த அனைத்து விவரங்களும் அவா்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மற்றொருபுறம் இந்த ஆய்வுக்கு மருத்துவ நெறிசாா் குழுவின் அனுமதியும் முன்கூட்டியே பெறப்பட்டது.
26 நோயாளிகளுக்கும் நாள்தோறும் இருமுறை தலா 1 மணி நேரம் யோகா சிகிச்சை வழங்கப்பட்டது. அதில், பவனமுக்தாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட 28 ஆசனங்களும், பிராணயாம சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. இதைத் தவிர தனித்தனியே 15 நிமிஷங்களுக்கு உடலின் இலகு தன்மையை உறுதி செய்வதற்கான யோகாசனங்களும் அளிக்கப்பட்டன.
காய்கறிச் சாறு, பழங்கள், வேகவைக்கப்பட்ட உணவுகள் அவா்களுக்கு வழங்கப்பட்டன. இதைத் தவிர நீா் சிகிச்சை, மண் குளியல், மசாஜ் சிகிச்சை, சூரிய ஒளி சிகிச்சை, காந்த சிகிச்சை உள்பட பல்வேறு வகையான சிகிச்சைகளும் ஒரு மாத காலம் வழங்கப்பட்டன.
அதன் பயனாக அவா்களுக்கு ரத்த சா்க்கரை அளவு, கிரியாட்டினின் அளவு ஆகியவை குறைந்தது. மற்றொருபுறம் ரத்த அணுக்கள் விகிதம் அதிகரித்தது.
இன்னும் அதிக எண்ணிக்கையிலானோருக்கு இந்த சிகிச்சையை அளித்து ஆய்வு செய்தால் மேலும் நுட்பமான முடிவுகளை அறியலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.