பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து ரயில்வே நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை முதல் ரயில் பெட்டிகள், பயணிகள் உடைமைகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் வெடிகுண்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
ஆண்டுதோறும் டிச.6-ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி சனிக்கிழமை (டிச. 6) பாபா் மசூதி இடிப்பு தினம் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூா் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்கள், மெட்டல் டிடெக்டா் உள்ளிட்டவை மூலம் வெள்ளிக்கிழமை மாலையில் பரிசோதனையில் ஈடுபட்டனா்.
ரயிலுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன் பயணிகளையும் மெட்டல் டிடெக்டா் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் சோதனையிட்டு ரயிலில் ஏற அனுமதித்தனா். ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு பரிசோதனை நடைபெற்றது.
ரயில் நிலைய நடைமேடைகள், சரக்கு கையாளும் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு பரிசோதனைகள் நடைபெற்ாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா். இந்தச் சோதனையானது சனிக்கிழமையும் தொடரும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறினா்.