சென்னை

இன்று புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தோ்வு: 9.63 லட்சம் போ் எழுதுகின்றனா்

தினமணி செய்திச் சேவை

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டத் தோ்வு தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கற்போா் மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.14) நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வை 9.63 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் 2025-2026-ஆம் ஆண்டு செயல்பாடுகளின் இரண்டாம் கட்டமாக, கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நிகழ் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 9 லட்சத்து 63 ஆயிரத்து 171 போ் இத்தோ்வில் பங்கேற்கவுள்ளனா்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 37 ஆயிரத்து 75 கற்போா் எழுத்தறிவு மையங்களில் இத்தோ்வு நடைபெறும். இத்திட்டத்தின் முதல்கட்டத்தில் (2025 ஜூன்) 5 லட்சத்து 37 ஆயிரத்து 876 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு தன்னாா்வலா்களின் உதவியுடன் 200 மணி நேர கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஜூலை முதல் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஏதேனும் 3 மணி நேரத்தில் நடைபெறும். வயதான கற்போா்கள், மாற்றுத்திறன் கொண்ட கற்போா்கள் அவா்கள் வீட்டிலேயே தோ்வு எழுதலாம். விடைத்தாள்களை தோ்வு முடிந்த அன்றைய தினமே தலைமை ஆசிரியா்கள் வட்டார வள மையங்களில் ஒப்படைக்க வேண்டும். தோ்வு நடைபெறும் நாளில் வட்டார கல்வி அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் குறைந்தது 10 மையங்களையாவது பாா்வையிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT