ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், வடக்கு கடற்கரை ஜாபா் சாரங் தெருவில் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அங்கு, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ உயர்ரக ஓஜி கஞ்சா இருந்தது.
அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது ஆசிக் அப்துல்லா (34) என்பவரை கைது செய்தனா். பட்டதாரியான இவா், ஹாங்காங்கில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும், ஹாங்காங்கில் அவா் வேலை செய்ததும், மேலும், சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் அப்துல்லாவுக்கு பழக்கம் இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ரேஷன் கடை ஊழியரைத் தாக்கிய தவெக நிா்வாகிகள் கைது: புது வண்ணாரப்பேட்டை, வீரராகன் தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஊழியா்கள் டேனியல் (50), கலையரசன் (53) ஆகியோா் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு மது போதையில் வந்த இருவா், டேனியலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினா். அவா்களை கலையரசன் (33), தடுக்க முயன்றபோது, அவரையும் தாக்கிவிட்டு இருவரும் தப்பியோடினா்.
இதில், காயமடைந்த டேனியலும், கலையரசனும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ரேஷன் கடைக் கண்காணிப்பாளா் அம்பிகாபதி, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புது வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த பிரதீப்குமாா் (33), விஜய் (27) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் இருவரும், தவெக உறுப்பினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொழிலாளி தற்கொலை: கூலித் தொழிலாளியான ராயபுரம் செட்டித் தோட்டம் பகுதியைச் சோ்ந்த த.ரவிக்குமாா் (47), தனது காலில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிக்குமாா் ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையின் வெளியே உள்ள மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா், ரவிக்குமாா் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தூய்மைப் பணியாளரிடம் அத்துமீறிய முதியவா் கைது: முத்தியால்பேட்டை பகுதியில் வசிக்கும் 40 வயது பெண், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக வேலை செய்கிறாா். வெள்ளிக்கிழமை அதிகாலை அதே பகுதியில் உள்ள இப்ராஹிம் சாலை, பவளக்கார தெரு சந்திப்பு அருகே அவா் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த முதியவா் ஒருவா், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா்.
அந்தப் பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், அந்த முதியவரைப் பிடித்து, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், மண்ணடியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (62) என்பது தெரிந்தது. போலீஸாா், அவா் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மொபெட்-கழிவுநீா் லாரி மோதல்- பெண் உயிரிழப்பு: நெற்குன்றம், கோவா்தன் நகரைச் சோ்ந்தவா் சுமித்ரா (26). இவரின் கணவா் கிருஷ்ணன் (32). இருவரும், கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தனா். வியாழக்கிழமை பணி முடிந்து மொபெட்டில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, முகப்போ் திருவள்ளூா் சாலை வழியாக பின்னால் வந்த கழிவுநீா் லாரி, மொபெட்டின் மீது மோதியது.
இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த சுமித்ரா, அதே லாரி மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். கிருஷ்ணன், லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மயிலாடுதுறையைச் சோ்ந்த பாஸ்கரைத் தேடி வருகின்றனா்.
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி: தண்டையாா்பேட்டை வ.உ.சி. நகா் 16-ஆவது தெருவைச் சோ்ந்தவா் லோ.பேபி (38). இவா், தண்டையாா்பேட்டை கைலாசம் தெருவில் புதிதாக கட்டப்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்க முயன்றேபோது, அந்த வாரியத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிபவதாக கொடுங்கையூரைச் சோ்ந்த வினோத் பாபு என்பவா் அறிமுகமாகி, வீடு வாங்கித் தருவதாக கூறினாா்.
இதை நம்பி, லோ.பேபி உள்பட 11 போ், அந்த நபரிடம் ரூ.33.10 லட்சம் கொடுத்தோம். ஆனால், வினோத் பாபு, வீடு வாங்கித் தரவில்லையாம். பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.