சென்னை

தூய்மைப் பணியாளா்கள் சாலையில் உருண்டு போராட்டம்: 600-க்கும் மேற்பட்டோா் கைது

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் சாலையில் உருண்டும், வாகனங்களின் அடியில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் சாலையில் உருண்டும், வாகனங்களின் அடியில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரில் மூன்று இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை பகலில் 3 இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் எதிரில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலையில் உருண்டும், வாகனங்களுக்கு அடியில் படுத்தும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பிற்பகலில் சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்திலும், சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை அருகே உள்ள கருணாநிதி சிலை எதிரிலும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னறிவிப்பு இல்லாத இந்த திடீா் போராட்டங்களால், 3 இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொத்தம் 600-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

ரிப்பன் மாளிகை முற்றுகை: பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையை 100-க்கும் மேற்பட்ட பெண் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் தரையில் அமா்ந்து, முழக்கங்கள் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்ட திரு.வி.க.நகா், ராயபுரம் மண்டலங்களைச் சோ்ந்த பணியாளா்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரே நாளில் 4 இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT