முகப்பு
சென்னை

ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவரா?உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயா்நீதிமன்றம் கேள்வி

Updated On : 10 ஜூலை 2025, 3:44 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவராக நினைக்கிறாரா? என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி வழக்குரைஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. இதேபோல மற்ற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தாததையடுத்து, ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, 4 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீ ராம், சுந்தா்மோகன் அமா்வு முன் புதன்கிழமை ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி முறையீடு செய்தாா்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பினாா். ஆணையா் தரப்பில் வழக்குரைஞா்கள் தவறான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தாலும், அதை அவா் படித்துப் பாா்த்து கையொப்பமிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவா் ஆணையராக இருக்கவே தகுதியற்றவா்.

ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவா் என்று அவா் நினைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கில் உரிய பிரமாணப் பத்திரத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆஜராக உத்தரவிட்டனா். மேலும், அபராதத் தொகையை ரத்து செய்வது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.