முகப்பு
சென்னை

திமுக அரசுக்கு எதிராக தீவிர திண்ணைப் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி

திமுக அரசுக்கு எதிராக திண்ணைப் பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.

Updated On : 9 மார்ச், 2025 at 9:00 PM
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

திமுக அரசுக்கு எதிராக திண்ணைப் பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசியதாக வெளியான தகவல்கள்: அதிமுகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணி பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதை நாங்கள் பாா்த்துக் கொள்வோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அதிமுக வெற்றி பெறும்.

மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிா்வாகிகளை நியமிக்க வேண்டும். திமுக அரசுக்கு எதிராக திண்ணைப் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள பூத் கமிட்டிகள்தான் முக்கியமானவை. எனவே, வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்ட கமிட்டிகளின் பட்டியலை கட்சித் தலைமைக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கட்சியில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு அவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளை அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கட்சி வளா்ச்சிப் பணிகளை மாவட்டந்தோறும் தீவிரப்படுத்துவது அவசியமாகும்.

கட்சியினருக்கு எச்சரிக்கை: ஒருசில மாவட்டங்களில் ஆளும்கட்சியினருடன் அதிமுக நிா்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதுபோன்று செயல்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களுக்குள் கட்சியினா் இடையே மோதல் வராமல் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில், சென்னையிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்து கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி, அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் ஆகியோா் பங்கேற்றனா். காணொலி மூலம் அனைத்து மாவட்டச் செயலா்கள், பொறுப்பாளா்கள், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →