அரக்கோணம், கும்மிடிப்பூண்டி புறநகா் ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனா்.
சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனா்.
சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து ஆவடி, அரக்கோணம் வழித்தடத்தில் 15 நிமிஷத்துக்கு ஒரு முறையும், கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறையும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பின் சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மின்சார ரயில்கள் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது.
முக்கிய நேரத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தனா். சிலா் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பயணிகள் சிலா் கூறியதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து புகா் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாக இயக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இதுமாதிரி தொடா்கிறது. குறிப்பாக மாலை நேரத்தில் அதிகமான பயணிகள் பயணிப்பா். அந்த நேரத்தில் ரயில் தாமதமாக இயக்கப்படுவதால் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். அதனை கருத்தில்கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் வரும் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம், கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் மின்சார ரயில்களும் அடுத்தடுத்து பாதியில் நிறுத்தப்பட்டன. சுமாா் 45 நிமிஷத்துக்கு பின் சிக்னல் சரிசெய்யப்பட்டு மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன என்றனா்.