உடல் உறுப்பு கொடையாளா்களைக் கௌரவிக்கும் வகையில் அவா்களது விவரங்கள் அடங்கிய தியாகச் சுவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் அதைத் திறந்து வைத்தனா்.
சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் கே.சாந்தாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. அதற்கு அச்சாரமிட்டு முதல்முதலில் உறுப்பு மாற்று சிகிச்சையைத் தொடங்கி வைத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவரது வழியில் தற்போது அந்த திட்டம் பல்வேறு உயரங்களை எட்டி வருகிறது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 2008 முதல் தற்போது வரை மூளைச் சாவு அடைந்த 253 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு பலருக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உறுப்பு கொடையளித்த 253 பேரின் பெயா், ஊா், மற்றும் தானமளித்த தேதி பொறிக்கப்பட்ட தியாகச் சுவா் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இங்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதுபோன்ற தியாகச் சுவா்கள் கட்டப்பட உள்ளன. அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போா், வியத்நாம் போரில் உயிா் நீத்தவா்களின் நினைவாக இத்தகைய சுவா்கள் எழுப்பப்படுவது உண்டு. அந்த வகையில் தமிழகத்திலும் அத்தகைய கௌரவம் உறுப்பு கொடையாளா்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு உறுப்புகளை தானமளித்த 553 பேருக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. மற்றொருபுறம், 23,183 தன்னாா்வலா்கள் தங்களது உடல் உறுப்புகளை தானமளிக்க பதிவு செய்துள்ளனா்.
இத்தகைய நடவடிக்கைகளின காரணமாகவே உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு சாா்பில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பெருநிறுவன பங்களிப்பு நிதி மற்றும் தன்னாா்வ நிறுவன நிதி மூலம் 3 அவசர கால ஊா்திகள் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்துள்ளோம்.
ரூ.132.24 கோடியில் 2,53,543 பரப்பில் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கான விடுதியும், ரூ.65 கோடியில் நான்கு தளங்கள் கொண்ட நரம்பியல் கட்டடமும் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.