சென்னை

தைராய்டு புற்றுநோய்: 5 வயது குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை

தினமணி செய்திச் சேவை

தீவிர தைராய்டு புற்றுநோய்க்குள்ளான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 5 வயது பெண் குழந்தைக்கு மிகவும் நுட்பமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை மற்றும் தலை - கழுத்து அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் பாலாஜி கூறியதாவது:

கழுத்து பகுதியில் பெரிய வீக்கத்துடன் இருந்த அக்குழந்தையை, அவரது தந்தை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தாா். பரிசோதனையில் குழந்தைக்கு பாப்பிலரி தைராய்டு காா்சினோமா எனப்படும் தைராய்டு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்தக் கட்டி கழுத்து பகுதியையும், குறிப்பாக குரல்வளை நரம்பையும் சுற்றி பரவியிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றினாலும், பிற உறுப்புகளுக்கு அதனால் சேதம் ஏற்படும் அபாயம் இருந்தது.

இருந்தபோதிலும், மருத்துவமனையின் குழந்தைகள் நலன், புற்றுநோயியல், அகச்சுரப்பியல் மற்றும் மயக்கவியல் மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் நுட்பமான அறுவை சிகிச்சையை முன்னெடுத்தனா்.

குறிப்பாக கழுத்து பகுதியில் இருந்த முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ரேடியோ அயோடின் ஸ்கேன் பரிசோதனையில் துல்லியமாகவும், முழுமையாகவும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது அக்குழந்தை நலமுடன் உள்ளது.

நாட்டிலேயே இவ்வளவு சிறு வயதிலான குழந்தைக்கு தீவிர தைராய்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படுவது இதுவே முதல்முறை என்றாா்.

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

டிச. 2 முதல் 4-ஆம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம்: இணையவழிப் பதிவு தொடக்கம்

தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

குடும்பத் தகராறு: இளம்பெண் தற்கொலை

SCROLL FOR NEXT