ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் நிலையான வளா்ச்சிக்கு சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார காரணிகளுடன் பாலின சமநிலை தேவையும் அவசியம் என்று ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஹபத்துல்லா ஆடம் வலியுறுத்தினாா்.
வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிலையான வளா்ச்சிக்கான பாலின சமநிலை குறித்த சா்வதேச மாநாடு புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியா் ஹபத்துல்லா பேசுகையில், குடும்ப உறவுகளில் பெண்கள் மதிக்கப்படும் அளவில் இருந்தாலும்கூட சமூக அதிகாரம், வேலைவாய்ப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அவா்களுக்குப் போதிய சமநிலை அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
ருவாண்டா மக்களவையில் 60 சதவீதம் பெண் உறுப்பினா்கள் உள்ளனா். சா்வதேச அளவிலான நிலையான வளா்ச்சிக்கு பாலின சமநிலை அவசியம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை உணா்ந்து, வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் சமூக அமைப்புகள் எல்லாம் சுற்றுச்சூழல் மற்றும் பாலின சமநிலை தொடா்பான கருத்தரங்குகள், ஆராய்ச்சி நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட வேண்டும் என்றாா்.
இந்த மாநாட்டில் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தா் டி.முருகேசன், இணை துணை வேந்தா் என்.தாஜூதீன், பதிவாளா் என்.ராஜா, ஜம்மு காஷ்மீா் பொருளாதார சங்கத்தின் தலைவா் பிா்தூஸ் அகமது, சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா் அயூப்கான் தாவூத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.