சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், நிறைவு செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகளை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து வாக்காளா்கள் கேட்டுப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்கள் நவம்பா் 4 முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணியில் பயிற்சி அளிக்கப்பட்ட 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. நிறைவு செய்த கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகளை, மற்றொரு படிவத்தில் வாக்காளரிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வழங்குவா். இந்த ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளா்கள் கவனமாக கேட்டுப் பெற வேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் இந்திய தோ்தல் ஆணையத்தின் இணைய கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.