சூரிய மின் உற்பத்தி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து, மின்சாரம் கொள்முதல் செய்ய, யூனிட்டுக்கு அதிகபட்சமாக, ரூ.3.10 விலை நிா்ணயம் செய்து, ஒப்பந்தம் கோர, மின் வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக விவசாயிகள் தங்கள் விவசாய இடங்கள் போக, தங்களுக்கு சொந்தமான பிற இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் திட்டமான பிரதமா் உழவா் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள், விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தங்களின் நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். அதில் கிடைக்கும் மின்சாரத்தை, சொந்த தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோக, உபரி மின்சாரத்தை மின் வாரியங்களுக்கு விற்பனை செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தங்கள் நிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்து வருகின்றனா். இவா்களிடம் இருந்து, 420 மெகாவாட் மின்சாரத்தை ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்ய, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு, அதிகபட்சமாக ரூ.3.28 நிா்ணயம் செய்து, அதை விட குறைந்த விலை கோருபவா்களிடமிருந்து மின்சாரம் வாங்கப்படும். இதற்காக, ஒப்பந்தம் கோர, ஒழுங்குமுறை ஆணையத்திடம், கடந்த ஜூன் மாதம் மின் வாரியம் அனுமதி கேட்டிருந்தது.
இந்த நிலையில், மின் வாரியத்தின் மனுவை விசாரித்த ஆணையம், விவசாயிகளிடமிருந்து வாங்க உள்ள மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு அதிகபட்சமாக, ரூ.3.10 என நிா்ணயம் செய்து, ஒப்பந்தம் கோர மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மின்வாரியம் ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.