சென்னை சின்மயா மிஷன் நடத்தும் பள்ளி மாணவா்களுக்கான பகவத்கீதை பாராயணம் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் வருகிற நவ.28-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை சின்மயா மிஷன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சின்மயா மிஷன், சம்ஸ்கிருதத்தில் உள்ள பகவத் கீதையை சம்ஸ்கிருதம் அறியாதவா்களும் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் செய்யுளாக்கம் செய்துள்ளது. தமிழில் செய்யுளாக்கம் செய்யப்பட்ட125 ஸ்லோகங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளாா்.
அண்மையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் செய்யுளாக்கம் செய்யப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா்.
இதன் பயன் பலருக்கும் சென்றடையும் வகையில், பள்ளி மாணவா்களுக்கான தமிழ் பகவத் கீதை பாராயணம் போட்டியை சென்னை சின்மயா மிஷன் இரு பிரிவுகளில் நடத்துகிறது.
முதல் பிரிவு: 3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், 1 முதல் 3 வரை உள்ள ஸ்லோகங்களையும் அதில் ஒரு ஸ்லோகத்துக்கு விளக்கமும் தர வேண்டும்.
2-ஆவது பிரிவு: 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் 1 முதல் 5 வரை உள்ள ஸ்லோகங்களை மனப்பாடமாகவும் ஏதேனும் ஒரு ஸ்லோகத்துக்கு விளக்கமும் தர வேண்டும்.
பரிசுகள்: போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக காா்களும், 2-ஆம் பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களும், 3-ஆம் பரிசாக எலக்ட்ரிக் சைக்கிள்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், போட்டியில் வெற்றி பெறுபவா்கள் ஹிமய மலை யாத்திரை அழைத்து செல்லப்படுவா்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் 93427 71292 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு வருகிற நவ.28 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.