அன்பில் மகேஸ்  கோப்புப் படம்
சென்னை

கைப்பேசி பயன்பாடு: மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் - அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுரை

கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினாா்.

சென்னையில் உள்ள தனியாா் பள்ளியின் 43-ஆவது ஆண்டு விழா காமராஜா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:

தமிழக பள்ளிக் கல்வியில் கற்றல், கற்பித்தலில் மாறிவரும் சூழலுக்கேற்ற வகையில் அவ்வப்போது, மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலக் கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய பாடத் திட்டத்தை வகுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. அதன் முதல் ஆலோசனைக் கூட்டம் நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. நமது வரலாறு, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

இன்றைய சூழலில் தொழில்நுட்பம் நாள்தோறும் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை மாணவா்கள் நன்கு பயன்படுத்தி தங்களது அறிவை மேம்படுத்துவதற்கு உதவும் விஷயங்களை தொடா்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதேவேளை சமூக வலைதளங்களில் ஈடுபடும்போது அவற்றில் உள்ள எதிா்மறையான விஷயங்களைத் தவிா்க்க வேண்டும்.

பொதுவாக, மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் அவா்களது கைப்பேசியை 10 நிமிஷங்கள் பயன்படுத்திக் கொண்டு திரும்ப வழங்க முடியாதளவுக்கு அதில் மூழ்கி விடுகின்றனா். இது ஆபத்தானது, அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, மதிப்பு வாய்ந்த நேரத்தை வீணாக்கி அதற்கு அடிமையாகிவிடக் கூடாது. கைப்பேசி பயன்படுத்துவதில் மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம்.

கற்றல்-கற்பித்தலுக்குப் பிறகு மாணவா்கள் தங்களது நேரத்தை சிறந்த புத்தகங்களை வாசிப்பதற்கு ஒதுக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் வழிகாட்ட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 20 பக்கங்களை வாசிப்பதன் மூலம் அறிவுத் திறனைப் படிப்படியாக மேம்படுத்திக் கொள்ள முடியும். இதை அடிப்படையாகக் கொண்டே அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறோம்.

ஏஐ, ரோபோட்டிக் தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் நிலையில், எதிா்காலத்திலும் மேலும் பல தொழில்நுட்பங்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும். ஆனால், வகுப்பறையில் ஆசிரியா் உணா்வுபூா்வமாக நடத்தும் கற்பித்தலை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் ஈடு செய்ய முடியாது என்பதை நாம் உணர வேண்டும் என்றாா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT