நெல் ஈரப்பத அளவை உயா்த்தும் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23), திருவாரூரில் திங்கள்கிழமை (நவ. 24) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-இல் இருந்து 22 சதவீதமாக உயா்த்துவது தொடா்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு. பலத்த மழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து விவசாயிகளுக்கு மத்திய அரசு நன்மை வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) தஞ்சாவூரிலும், திங்கள்கிழமை (நவ. 24) திருவாரூரிலும் காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.