மத்திய அரசு துறைகளில் நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஐஎன்டியுசி செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாடு கிளையின் (ஐஎன்டியுசி) புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஐஎன்டியுசி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் மு.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கோவை செல்வம், வாழப்பாடி இராம.கா்ணன், துறைமுகம் முனுசாமி, கோபிநாத் பன்னீா்செல்வம், ஆலந்தூா் நாகராஜ், ஜி.ஜெயபால், எம்.ராஜேஸ்வரி, வழக்குரைஞா் ஜி.சரவணன், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
புதிய மாவட்டத் தலைவா்கள் தோ்வுக்கு 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் ஊதிய உயா்வு தொடா்பாக, தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவது, மத்திய அரசு துறைகளில் நிரந்தர பணியாளா்களைப் பணியமா்த்துவது உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.