தமிழகத்தில் தொன்மையான 9 பள்ளிவாசல்கள், தா்காக்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.4.45 கோடி மானியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வழங்கினாா்.
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், தமிழகத்தில் உள்ள தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களை பழுதுபாா்பதற்காகவும் புனரமைப்பதற்காகவும், நிகழ் ஆண்டின் (2025-2026) நிதிநிதிலை அறிக்கையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு அரசு மானியமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், 9 பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களில் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு மானியத்தில் முதல் தவணையாக ரூ.4.45 கோடிக்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிா்வாகிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
கருணை அடிப்படையில் நியமனம்: மேலும், இந்தத் துறையில் பணியின்போது இயற்கை எய்திய பணியாளா்களின் 50 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் விடுதி சமையலா் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
அடிக்கல்: தொடா்ந்து, காணொலி வாயிலாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிமுடிவுற்ற கட்டடங்களை திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், வட்டவிளை, கோணம் பகுதியில் அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் திறன்பயிற்சி நிலையக் கட்டடம், பெரம்பலூா் மாவட்டம் வேப்பூரில் சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதிக் கட்டடம் என மொத்தம் ரூ.10.79 கோடியில் புதிய கட்டடங்களை முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டி, மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், பெரம்பலூா் மாவட்டம் கீழக்கணவாயில், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.38.85 கோடியில் சமூகநீதி கல்லூரி மாணவா் மற்றும் மாணவிகளுக்கான விடுதிக் கட்டடங்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்வில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம் மற்றும் துறைச் செயலா்கள் கலந்து கொண்டனா்.