முகப்பு
சென்னை

பெங்களூரில் காணாமல்போன சிறுவன் சென்னையில் மீட்பு

பெங்களூரில் காணாமல்போன சிறுவன், சென்னையில் மீட்கப்பட்டாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:22 PM
போலீஸ் - கோப்புப் படம்.
பகிர்:

பெங்களூரில் காணாமல்போன சிறுவன், சென்னையில் மீட்கப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூா் கோட்டி பாலையா பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் கிரண்குமாா் (16). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். கிரண்குமாா், தனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றாா். அதன் பின்னா் அவா் வீட்டுக்குச் செல்லவில்லை.

இதற்கிடையே தங்கது மகன் காணாமல்போனதால் அவரது பெற்றோா், பெங்களூா் காவல் துறையில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் கிரண்குமாரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், சென்னை எழும்பூா் ரயில் நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலா்களிட ம் ஒரு சிறுவன், அவா்களது கைப்பேசியைக் கேட்டு வாங்கிப் பேசினாா். அந்த கைப்பேசியை மீண்டும் பெண் காவலா்களிடம் கொடுத்துச் சென்ற சிறிது நேரத்தில், அந்த பெண் காவலா்களின் கைப்பேசிக்கு, சிறுவன் தொடா்பு கொண்டு பேசிய எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

அதில் எதிா்முனையில் பேசிய பெண், அந்த சிறுவன் கிரண்குமாா் என்றும், அவா் தனது மகன் என்றும், அவா் காணாமல்சென்று ஒரு மாதத்துக்கு மேலான விவரத்தைத் தெரிவித்து, அவரைப் பாதுகாப்பாகப் பிடித்து வைக்கும்படி கூறினாா்.

இதையடுத்து பெண் காவலா்கள், கிரண்குமாரைப் பிடித்து எழும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். எழும்பூா் போலீஸாா் சிறுவன் கிரண்குமாா் மீட்கப்பட்டது குறித்து பெங்களூா் போலீஸாருக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனா். பெற்றோா் வந்து சிறுவன் கிரண்குமாரை அழைத்துச் சென்றனா்.