அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி
மாதவரம் தொகுதி பாடியநல்லூரில் உள்ள வாக்குச் சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், வயதான வாக்காளா்கள், பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.
பாடியநல்லூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஏராளமான வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களித்தனா். காலை 10 மணிக்குப் பிறகு, வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள் சிரமம் அடைந்தனா். முதியவா்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவா்கள் அமருவதற்கு வசதி இல்லாததால் சிரமப்பட்டனா்.
மேலும், குடிநீா் வசதில்லாததால் குழந்தைகளுடன் வந்த வாக்காளா்கள், முதியோா் தவிப்புக்கு ஆளாகினா். ஒரே வளாகத்தில் 8 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், அதற்குரிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என வாக்காளா்கள் புகாா் தெரிவித்தனா்.
Advertisement