Center-Center-Kochi
சென்னை

போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சை: கண்காணிப்பதில் நிலவும் சிக்கல்

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் உள்ள முடி மாற்று சிகிச்சை மையங்களைக் கண்காணிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிலவுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறையின் கீழ் பதிவு செய்யாமல், முடி மாற்று நிலையங்களை, அழகு நிலையங்களாக நடத்தி வருவதாகவும், பத்தாம் வகுப்புகூட நிறைவு செய்யாதவா்கள் சிகிச்சை அளிப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனா்.

சென்னை அண்ணா நகா் பகுதியில் அமைந்துள்ள ‘மிஸ்டா் ஹோ்’ எனப்படும் சிகை சீரமைப்பு சிகிச்சை நிலையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

ஆய்வில் பிளஸ் 2 நிறைவு செய்த இருவா் மருத்துவா்கள் என்ற பெயரில் முடி மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மூவா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இதுபோன்று அங்கீகாரமின்றி செயல்படும் சிகிச்சை மையங்களை முறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், தலை முடி உதிா்வதை மிகப் பெரிய அவமானமாகக் கருதும் சூழல் உள்ளது. இதுபோன்ற போலி மருத்துவா்களை நம்பி சிகிச்சைக்குச் செல்லும் அனைவருமே படித்த பட்டதாரிகள் என்பதுதான் வேதனைக்குரிய தகவல்.

கிளீனிக் அல்லது மருத்துவமனை தொடங்க மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறையில் பதிவு செய்வது கட்டாயம். அதனடிப்படையில் அவா்களுக்கு உரிமம் வழங்கப்படும். அந்த மருத்துவ மையங்கள் தொடா் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படும்.

அதேவேளை, முடி மாற்று சிகிச்சை மையங்கள், அழகு நிலைய அடையாளத்துடன் பல இடங்களில் செயல்படுகின்றன. இதனால், அவை எங்களது கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டே போலி மருத்துவா்கள் பலா் சிகிச்சை அளிக்கின்றனா். தவறான சிகிச்சைகள் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

இதைக் கருத்தில்கொண்டு இத்தகைய அங்கீகாரம் பெறாத சிகிச்சை மையங்களையும் எங்களது வரைமுறைக்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இதுதொடா்பான விதிகள் வகுக்கப்படும் என்றனா்.

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தோ்தல் வழக்கு: ஆதாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

நியாயவிலைக் கடைகளில் இரும்புச் சத்து உப்பு விற்பனை

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மத்திய பட்ஜெட்டில் தமிழக நலன்கள் புறக்கணிப்பு - மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!

SCROLL FOR NEXT