முகப்பு
சென்னை

நிகோடின் பொட்டலங்களை விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்

நிகோடின் பொட்டலங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 2:50 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 2:48 AM

நிகோடின் பொட்டலங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

புகையிலை பொருள்களில் 100-க்கும் மேற்பட்ட ரசாயன நச்சு பொருள்கள் உள்ளன. அதில், நிகோடின் ரசாயனம் மட்டுமே மீண்டும் புகையிலைப் பயன்பாட்டைத் தூண்டி, அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்க வழிவகுக்கிறது. எனவே, புகையிலைப் பழக்கத்தை படிப்படியாகக் குறைக்க நிகோடின் கலந்த சுவிங்கம் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட நிகோடின் சுவிங்கம் சந்தையில் விற்பனையில் உள்ளது.

Advertisement

அதேவேளையில், நேரடியாக நிகோடினை பொட்டலமாக வாயில் அடக்கிக் கொள்ளும் "நிகோடின் பவுச்' சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. அவை முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இணைய வர்த்தக தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக நிகோடின் பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, "ஸ்வாக் ஸ்லிம் ஒயிட் மிண்டோ நிக்கோடின் பவுச், டபிள்யூஜி ஒயிட் கோல்ட் ஸ்ட்ராங் மாசிவ் மிண்ட் நிக்கோடின் பவுச், டேஸ் டிராபிகல் மிஸ்ட் நிக்கோடின் பவுச், ஐஸி மிண்ட் நிக்கோடின் பவுச் போன்ற பெயர்களில் அவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது விதிகளுக்குப் புறம்பான செயல் என்பதால் அதை விற்பனை செய்யும் அமேசான், வேர்ல்ட் ஆஃப் நிகோடின், தோலக்கியா டொபாகோ, பைடேஸ் போன்ற நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகோடின் பொட்டலங்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவை நேரடியாக ரத்த ஓட்டத்தில் நிகோடினை கலக்கச் செய்கின்றன. மேலும், கட்டுப்பாடற்ற நிகோடின் நுகர்வு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும்.

உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இணைய விற்பனையாளர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் அவற்றை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து விளக்கங்கள் மற்றும் புகார்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் 94458 65400 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.