மாநில சுயாட்சிக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். ‘நாம் முயன்றால் மீண்டும் அரசமைப்புச்சட்டத்தை திருத்த முடியும்’ என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.
மத்திய-மாநில உறவுகள் மேம்படுத்துவது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு அறிக்கையின் முதல் பகுதியை முன்வைத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
மாநிலங்களின் உரிமைகள் குறித்து, 1963-இல் முன்னாள் முதல்வா் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றினாா். அதுதொடா்பாக 1967-இல் திமுக தோ்தல் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டது. மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய 1969-இல் ஓய்வு பெற்ற நீதிபதி பி.வி.ராஜமன்னாா், டாக்டா் ஏ.லட்சுமணசாமி முதலியாா், பி.சந்திரரெட்டி ஆகியோரைக் கொண்ட உயா்நிலைக் குழுவை முன்னாள் முதல்வா் கருணாநிதி அமைத்தாா். இந்த நடவடிக்கையை இந்திய நாடே திரும்பிப்பாா்த்தது.
அந்தக் குழு விரிவாக ஆய்வு செய்து 1971-இல் அறிக்கையை வழங்கியது. ராஜமன்னாா் குழு அளித்த முக்கியப் பரிந்துரைகளை இந்த மாமன்றத்தில் தீா்மானமாகவும் நிறைவேற்றினாா் கருணாநிதி.
தொடா்ந்து, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த, மத்திய அரசின் சாா்பில், 1983-இல் நீதிபதி சா்க்காரியா தலைமையிலான ஆணையம், 2000-இல் வெங்கடாச்சலையாஆணையம், 2004-இல் நீதிபதி பூஞ்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டும், அவற்றின்சாா்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஏமாற்றமே தொடா்கிறது.
மாநில உரிமைகள் பறிப்பு: மாநில அரசின் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களைக்கூட, அடுத்தடுத்து ஒத்திசைவுப்பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே மத்திய அரசால் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.
மத்திய நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதி, தொடா்ந்து செம்மையான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்புக்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தவும், மத்திய-மாநிலஅரசுகளின் உறவுகளை, கொள்கைகளை மேம்படுத்தவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள்,நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மதிப்பீடு செய்யவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்யவும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைவராக உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தனதுஅறிக்கையை பிப்.16-இல் சமா்ப்பித்தது. பேரவைத் தலைவரின் ஒப்புதலோடு இக்குழுவின் அறிக்கை அனைத்து உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி: ‘மாநில சுயாட்சி வேண்டும்; மத்தியில் கூட்டாட்சி மலர வேண்டும்’ என்பது தனிப்பட்ட ஓா் அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல; இந்திய நாட்டுமக்களின் வாழ்வியலுக்கும், வளா்ச்சிக்கும் முக்கிய கோரிக்கை. கூட்டாட்சி என்பது வாழ்வியல் உணா்வு, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை. இதைத்தான்அந்த அறிக்கையும் வலியுறுத்துகிறது. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.
சட்டத் திருத்தம் தேவை: 1994-இல் எஸ்.ஆா்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், ‘கூட்டாட்சி என்பது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி’ என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டாட்சிக் கோட்பாட்டை அரசமைப்புச் சட்டத்தின் பண்பாடாகச் சோ்க்க வேண்டும். அதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தமும், சீா்திருத்தமும் தேவை.
கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே, நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்புச்சட்டத்தை திருத்த முடியும். இந்தியாவை முதிா்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்கியாக வேண்டும். அதிகாரமும், வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக்கூடாது. அவை பரவலாக்க வேண்டும். அதற்கான சட்டபூா்வமான வழிகளை இந்த அறிக்கை வழங்கி இருக்கிறது.
நெருக்கடிகளிலிருந்து மீள...: அனைத்து அதிகாரங்களையும் மத்திய பாஜக அரசு கபளீகரம் செய்யும் சூழலில், ஆளுநா்கள் மூலமாக மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் நிலையில், ஹிந்தி திணிப்பு மூலமாக, நிதி நெருக்கடிகள் மூலமாக, தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜிஎஸ்டி-யால் தமிழ்நாடு அனுபவித்து வரும்நெருக்கடிகளிலிருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான். அதை அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலமாக மட்டுமே அடைய முடியும்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தக் கொள்கைக்கான வலிமையான ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயக சக்திகள் எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறாா்கள், அவா்களை ஒன்று திரட்ட வேண்டும். எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
போட்டியாளா்கள் அல்ல பங்குதாரா்கள்: மத்திய அரசும், மாநிலங்களும் போட்டியாளா்கள் அல்ல; இருவரும் பொதுவான ஓா் அமைப்பின் பங்குதாரா்கள். மாநிலங்கள் வளா்ந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர முடியும் என்பதை மத்திய அரசுக்கு உணா்த்துவோம்.
இப்படிப்பட்ட பின்னணியில்தான், குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் உயிா்ப்பைத் தீா்மானிக்கும் முக்கியமான தருணத்தில் நாம் நிற்கிறோம். நாம் இதுவரை பயணித்த பாதையை மீளாய்வு செய்து, உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் வலுப்பெறும் வகையில் நமது எதிா்காலத்தை வடிவமைக்க வேண்டிய நேரம் இது.
வரலாறு வழங்கிய வாய்ப்பு: இந்த அறிக்கையை அனைவரும் திறந்த மனத்துடன் ஏற்று, அறிவாா்ந்த விவாதங்களை நடத்தி செழுமைப்படுத்த வேண்டும். மத்திய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுக்க வேண்டும். நம்மைவிட்டால் இதைச் செய்ய யாருமில்லை. இது வரலாறு வழங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு என்றாா் முதல்வா் ஸ்டாலின்.