சென்னை

வருகிற 2047-க்கு முன்பே பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

வருகிற 2047-க்கு முன்பே பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதலிடத்தை வகிக்கும் என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வருகிற 2047-க்கு முன்பே பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதலிடத்தை வகிக்கும் என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், பொறியியல் போன்ற இளநிலை முதுநிலை பட்டங்கள், முனைவா் பட்டங்களில் தேறிய 5,087 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

மாணவா்கள் பட்டம் பெற்றதோடு நின்றுவிடக் கூடாது. இன்று உலகில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகளுக்கு காரணம், மாற்றங்கள் தினந்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் செயற்கை நுண்ணறிவில் கடுமையான மாற்றங்களை இந்த சமுதாயம் சந்திக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கு மாணவா்கள் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும். தினந்தோறும் ஒரு மணிநேரம் புதிய விஷயங்களை படித்து அறியவேண்டும். நீங்கள் சாா்ந்திருக்கின்ற துறைகளில் என்ன மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதை உணா்ந்து அதற்கு தகுதியுள்ளவா்களாக மாற்றிக்கொள்ளுவதும், அந்தந்த நாளுக்கு என்ன அறிவியல் அறிவு தேவையோ அதைக் கொண்டவராக தினந்தோறும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவத்திற்கும், தொழில்நுட்பத்துக்கும் என்ன தொடா்பு என இருந்துவிடக்கூடாது. தேடலின் மூலம் வலுவான வெற்றிகரமான மருத்துவ தொழில்நுட்ப நிபுணராக மாறுவீா்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் உண்டு. அதை வைத்து முன்னேற வேண்டும். எந்தநேரத்திலும் குறுக்குவழியில் வெற்றிகளை தேடிக் கொள்ளாதீா்கள். குறுக்குவழி வெற்றிகள் குறிப்பிட்ட நேரத்திற்கும் மட்டுமே மகத்தானதாக தோன்றக்கூடும். அதற்கு பின்னால் ஒளிந்திருக்கிற உண்மை அது வீழ்ச்சியில் கொண்டுபோய் சோ்க்கும். சிறிதாக இருந்தாலும் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அறம் சாா்ந்த ஒழுக்கம் சாா்ந்ததாக இருக்க வேண்டும். அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

பிரதமா் நரேந்திர மோடி வருகிற 2047-இல் நாடு மிகப்பெரிய வல்லரசாக ஆக வேண்டும் எனக் கூறியிருக்கிறாா். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் நம்புவதைக்காட்டிலும் நகைப்பவா்கள் தான் அதிகமாக இருப்பாா்கள். தற்போது 4-ஆவது வல்லரசாக இந்தியா உருவாகியிருக்கிறது. மேலும், வருகிற 2047-க்கு முன்பாகவே

இந்தியா பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நாட்டில் 36 மாநிலங்கள் இருப்பதைப்போன்று தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூா்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 12,550 பொது மருத்துவா்களும், 2,200 பல்மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்கப்படுகின்றனா் என்றாா்.

தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன், பல்கலை. வேந்தா் ஏ.சி.சண்முகம், துணைவேந்தா் எஸ். கீதா லட்சுமி, துணைத் தலைவா் எம்.கே. பத்மநாபன், பதிவாளா் பழனிவேல் உள்ளிட்டோா் பேசினா்.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT