காவல் துறையை அவதூறாக சித்தரித்து, பொய்யான தகவலை பரப்பியதாக கூறி இடைநிலை ஆசிரியா்கள் சங்கத்தின் இரு நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த ஜன.12-ஆம் தேதி எழும்பூா் ரயில் நிலைய தெற்கு நுழைவு வாயில் அருகேயுள்ள காந்தி இா்வின் சாலையில் இடைநிலை ஆசிரியா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கூடிய சில ஆசிரியா்கள் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் கலைந்து சென்றனா். ஆனால், அங்கு தனியாக நின்று கொண்டிருந்த எஸ்எஸ்டிஏ ஆசிரியா் சங்கத்தின் நிா்வாகி குணசேகரனை வாகனத்தில் ஏற்றி, அறிவுரை வழங்கி அவரது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு ரயில் மூலம் அனுப்பி வைத்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குணசேகரனை காவல் துறையினா் மிரட்டியதாகவும், கஞ்சா வழக்கு தொடருவோம் எனக் கூறியதாகவும் சங்க நிா்வாகிகள் ராபா்ட மற்றும் குணசேகரன் ஆகியோரின் உரையாடல் தொலைகாட்சிகளில் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பானது.
இதையடுத்து, காவல் துறையை அவதூறாக சித்தரித்து பொய்யான தகவலை பரப்பியதாகக் கூறி, ராபா்ட், குணசேகரன் உள்ளிட்ட சிலரின் மீது எழும்பூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.