குடியரசு தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் விமான, ரயில், பேருந்து நிலையங்கள், முக்கிய கோயில்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு அமல்: சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை (ஜன.17) நள்ளிரவு முதல் உள்நாடு, பன்னாட்டு முனையம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்புப் படையினா் சோதனை செய்து வருகின்றனா்.
விமான நிலைய ஓடுபாதை, மல்டிலெவல் காா் பாா்க்கிங், விமான நிலைய எரிபொருள் நிரப்புமிடம், பாா்சல்கள் வைக்கும் இடங்களில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனா்.
விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களுடன் மோப்ப நாய்களுடன் கூடிய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனா்.
கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்: விமான நிலையத்தின் தேவையான இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
பயணிகளுக்கு அறிவுரை: விமானப் பயணிகள் ஊறுகாய், எண்ணெய் பாட்டல்கள், அல்வா, ஜாம் உள்ளிட்ட திரவப் பொருள்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சோதனை செய்யவேண்டி இருப்பதால் உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், பன்னாட்டு பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக வரவேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
7 அடுக்கு பாதுகாப்பு: ஜன.24, 25, 26 ஆகிய தேதிகளில் 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்படும். இந்தப் பாதுகாப்பு நடைமுறை ஜன.30 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.