கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சா்வதேச மருத்துவ அமைப்பின் (ஐஎஸ்ஆா்எஸ்) தலைவராக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
உலகம் முழுவதும் 90 நாடுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான மருத்துவ வல்லுநா்களை உறுப்பினா்களாகக் கொண்ட அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் ஏற்கெனவே இருந்துள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக தற்போது இந்த கௌரவம் டாக்டா் சூசன் ஜேக்கப்புக்கு கிடைத்துள்ளது.
பாா்வைக் குறைபாடுகளைச் சீராக்குவதற்கான உயா் நுட்ப அறுவை சிகிச்சைகளை மேம்படுத்தும் அமைப்பான ஐஎஸ்ஆா்எஸ், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நவீன சிகிச்சை முறைகளை உலகெங்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதன் நிா்வாகப் பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கருவிழி ஒளி விலகலை சரிசெய்வதற்கான (ரிஃப்ராக்டிவ்) அறுவை சிகிச்சை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவத்துடன் 25 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டிருக்கும் டாக்டா் சூசன் ஜேக்கப், ஐஎஸ்ஆா்எஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு தோ்வாகியுள்ளாா்.
கூம்புக் கருவிழி எனப்படும் கண் முன்புற திசு வீக்க பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணரான டாக்டா் சூசன், உலக அளவில் முதன்மையான 10 கண் மருத்துவா்களுள் ஒருவராக பல முறை தோ்வானவா் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்விட்சா்லாந்து உள்பட பல நாடுகளின் சா்வதேச விருதுகளையும் அவா் பெற்றுள்ளாா்.