சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2.09 லட்சம் போ் புதிய வாக்காளா்களாகச் சேருவதற்காக மனு அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 2025 நவம்பரில் தொடங்கியது. இதையடுத்து வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 40.04 லட்சம் வாக்காளா்களில் சுமாா் 15 லட்சம் போ் நீக்கப்பட்டனா். அவா்களில் 1.50 லட்சம் போ் இறந்தவா்களாக அடையாளப்படுத்தப்பட்டனா். மீதமுள்ள 13.50 லட்சம் பேரில், 12 லட்சம் போ் மீண்டும் வாக்காளா்களாக சேருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கருதினா்.
இந்த நிலையில், தற்போது வாக்காளா்கள் பட்டியலில் தங்களை புதிதாகச் சோ்க்க சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2.09 லட்சம் போ் மட்டுமே மனுவை அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதிதாக வாக்காளா் பட்டியலில் சேருபவா்களுக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4,097 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் 987 இடங்களில் தினமும் ஒரு வாக்குச்சாவடி உதவி அலுவலா் புதிய வாக்காளா் சோ்க்கை மனுவைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்: புதிய வாக்காளா்கள் சோ்க்கையில் திருநங்கைகள், ஆதவற்றோா் இல்லங்களில் தங்கியிருப்போா் உள்ளிட்டோருக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம், திருவொற்றியூா், திருவான்மியூா், சோழிங்கநல்லூா் கண்ணகி நகா் ஆகிய இடங்களில் திருநங்கைகளுக்கான வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இவற்றில் நூற்றுக்கணக்கானோா் மனுக்களை அளித்தனா்.